நவீன விவசாயத்துறை ஒரு முட்டாள்தனத்தைச் செய்து வருகிறது; அது என்னவென்றால் எங்கோ வளர்ந்து வரும் நாடுகளின் ஏகபோக உரிமை இருக்கும் இரசாயன உரத்திற்கும், பீடைகொல்லிக்கும் நல்ல விளைச்சலைக் கொடுக்கும் விதைகளை மக்கள் மனதில் "நல்ல விதைகள்" என்று நம்பவைத்து, இயற்கையில் காணப்படும் இயல்பான சுதேச இனங்களை, அதிக உள்ளீடு இல்லாமல், அதிக விளைச்சலைத் தரும் இனங்களைக் கண்டுபிடிக்க தகுந்த ஆராய்ச்சி செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.
இப்படியொரு முறையான நீண்டகால ஆராய்ச்சியும், உழைப்பும் சிரத்தையும் இல்லாமல் இப்போது உரம் இல்லை, இரசாயனம் இல்லை என்றவுடன் விவசாயத்துறை விழுந்துவிட்டது, அதற்கு காரணம் இது, அது என்று கம்பு சுற்றி அதிகாரத்தில் உள்ளவரைக் கையைக் காட்டி விட்டு, தாங்கள் ஏதோ ஒன்றும் செய்யாதவர்கள் போல் தம்மையும் மற்றவர்களையும் ஏமாற்றலாம் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.
உண்மையான காரணம் இப்படியான ஒரு சூழலிற்கு பலனளிக்கக் கூடிய விதைகளைக் கண்டுபிடிக்க நாம் எமது ஆராய்ச்சியையும், உழைப்பையும் செய்யவில்லை என்பதாகும்.
இதேபோன்ற ஒரு முட்டாள்தனம்தான் இலங்கை மக்களின் அரசியலும்; அறுபது, எழுபது வருடமாக இனத்துவேஷத்தையும், அழிவையும், குழப்பத்தையும் விரும்புபவர்களையே தமது அரசியல் தலைவர்களாக தெரிவு செய்து பழக்கப்படுத்தி, - (எப்படி இரசாயன உரத்திற்கு துலங்கள் காட்டும் விதைகளை நல்ல விதைகள் என்று கூறி ஏமாற்றிக்கொண்டிருந்தோமோ) - அதையே நல்ல அரசியல் என்று எண்ணிக்கொண்டிருந்த முட்டாள்களுக்கு திடீரென உலக ஒழுங்கு பொருளாதாரம் என்ற ஆணியைப் பிடுங்கியவுடன் குழம்பிப்போன குரங்குகள் போல் தாம் தெரிவுசெய்த முட்டாள் அரசியல்வாதிகளின் மேல் கோபம் பொங்கிக்கொண்டு வருகிறது.
ஒரு தேசம் வளர வேண்டும் என்றால் இனம், மதம், மொழி இவற்றினால் பிளவுபடாத மனித வளமும், அந்த ஒத்திசைந்த மனித வளத்தினை ஒருங்கிணைத்து உலக ஒழுங்குடன் பொருளாதாரம் வளரக்கூடிய அறிவு, ஆற்றல் சமூகத்தில் வளர்க்கப்பட வேண்டும்.
இலங்கை விவசாயத்துறையில் எப்படி இரசாயனத்திற்கும், பீடைகொல்லிக்கும் நல்ல விளைச்சலைத் தரும் விதைகளை நல்ல விதைகள் என்று விளம்பரப்படுத்தி இன்று உற்பத்தி இல்லாமல் எப்படி தடுமாறுகிறதோ,
அதேபோல்
இனத்துவேஷம் கக்கி, போர் செய்பவர்கள்தான் வீரர்கள், தலைவர்கள் என்று உசுப்பேற்றி தெரிவு செய்த எந்த அரசியல்வாதிகளும் இன்றைய சவாலிற்கு முகம் கொடுக்க முடியாத தலைவர்கள் என்பதை உணராமல் ஜனாதிபதியை, பிரதமரை மாற்றிக்கொண்டிருந்தால் பிரச்சனை தீரும் என்று கனவு காண்கிறார்கள்.
முதலில் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் சகோதரத்துவம், ஒற்றுமை, இணைந்து செயலாற்றுதல், சவாலுக்கு முகம் கொடுத்தல் என்பன ஒவ்வொரு பிரஜைகளின் பண்பாகவும், அத்தகைய பண்பு உடையவர்களையே அரசியல் தலைவராகவும் கருதும் மனப்பண்பு மக்களிற்குள் உருவாக வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்கவைப்பதை விட தமது மக்களுக்கு, அபிவிருத்திக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம் என்று உளமாரச் சிந்திக்க வேண்டும்.
உதாரணமாக மலையக மக்களிற்கு வீடு, நிலம் இல்லை என்று ஒவ்வொரு முறையும் மலையக அரசியல்வாதிகள் பேரம் பேசுகிறோம் என்று ஏமாற்றாமல், அரசாங்கம் தருகிறதோ, இல்லையோ எமது சமூகத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து நிலங்களை வாங்கி ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கலாம் என்ற இலகுவான தீர்விற்கு செல்லாத கபடத்தனம் இல்லாமல் போக வேண்டும்.
இப்படி பிரச்சனையின் ஆணிவேரிலிருந்து தீர்வினை யோசிக்க வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.