எழுதியிருப்பவற்றை
தமிழில் சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி அணி கொண்டு வாசிக்கவும்; இவை என்னவென்று தெரியாத
சீரியஸ் தலையர்கள் விலகிச் செல்லவும்!
தற்போது மின்வெட்டுக் காரணமாக
மின்சாரம் இல்லாத நேரத்தினை ஓய்வு நேரமாக உறக்கத்திற்கும் இரவில் மின்சாரம் உள்ள
நேரத்தில் பணிபுரியும் நேரமாகவும் மாற்றலாம் என்று எண்ணுகிறேன்!
இதைத்தான் Go with the
flow என்பதோ?
எப்படியோ நான்கு ஐந்து மணி நேரம்
கணனியைப் பார்க்காமல், வேலையில்லாமல் பகலில் ஓய்வெடுக்கச் சொல்லி நாட்டுப்
பிரஜைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டிருக்கும் அரசினை நாம் மனமாரப் பாராட்ட
வேண்டும்!
அதுபோல் பிறகு செய்யலாம் என்று
பிற்போடலாம் என்று வாழும் எம்மையெல்லாம் இந்த நேரத்திற்குள் திட்டமிட்டு
பணியாற்றும் ஒழுக்கத்தை இலங்கை வாழ் மக்கள் பழக வேண்டும் என்ற உயரிய எண்ணமும்
அரசிற்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.
மேலும் காபன் மாசு குறைத்தல்,
இயற்கையுடன் வாழப் பழகி கற்கால வாழ்க்கைக்கு திரும்புதல், இரசாயன உரம் பாவிக்காமல்
பழங்காலத்து புராதன அறிவினை பயிற்சித்தல் போன்ற உயரிய கொள்கைகள் நாடி நரம்பில்
ஊறிய அரசாக இருப்பது எமக்கெல்லாம் பெருமையான விஷயமன்றோ!!!
இருவேளை உணவே ஒருவன் ஆரோக்கியம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது; ஒரு வேளை உணவு உண்பவன் யோகம் பயின்று சித்திபெறும் தகுதியைப் பெறுவான் என்று உணர்ந்துகொண்ட அரசு விலைகளைக் கூட்டி கண்ட கண்ட நொறுக்குத் தீனி உண்டு ஆரோக்கியம் கெடக்கூடாது; ஒரு வேளை உணவு நாட்டு மக்களுக்கு போதும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தான் உணவுப் பொருட்கள் விலை கூட்டுகிறது என்ற நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த சில மாதங்களாக டெமோ காட்டப்பட்டதிலிருந்து எரிவாயு எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமைத்துச் சாப்பிடாமல் எல்லோரும் பச்சையாக இயற்கை உணவு உண்ண வேண்டும் என்ற கொள்கை வெகுவிரைவில் என்றாவது ஒரு நாள் இரவு தூங்கி எழுந்தவுடன் அமுல்படுத்துவதற்கு இப்பொழுதே ஒத்திகை என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏ.சி, மின்விசிறி பயன்படுத்துவதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் ஆரோக்கியம் கெடுகிறது என்பதை அறிந்து இந்தக் கோடைக்காலத்தில் நான்கு ஐந்து மணித்தியாலம் வியர்க்க வைத்து உடலாரோக்கியம் பேணவைக்கிறது எமது புத்திசாலி அரசு!
எப்படி இருப்பினும் எம்மைக் காப்பாற்ற சின்னண்ணன் சீனத்து சிங்காரமும் பெரியண்ணன் டெல்லி பாபுவும் இருக்க இலங்கைத் தம்பி கடன் வாங்கினால் என்ன, மீளக்கட்டாவிட்டால் என்ன?
எல்லா வளங்கள் இருந்தும், புத்தனின் ஞானமும் மறந்து, மனிதர்களை இணைக்கத் தெரியாமல் குரோதமும், துவேஷமும், தலைக்கனமும் பிடித்து, பிரிவினை விதைத்து ஆசியாவின் ஆச்சரியமாக மாறிக்கொண்டிருக்கிறோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.