மஹாபத்மாடவீ-ஸம்ஸ்தாயை (59)
தாமரைக்காட்டில் உறைபவள்
தாமரைகளால் நிறைந்த வனத்தில் வசிப்பவள். தாமரை
மலர் நீரில் மட்டுமே மலரும். இயற்கையின் வளத்தினைப்பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது.
பெரும் மலைகளும் சிகரங்களும் பற்றி முன்னைய நாமங்களில் விபரிக்கப்பட்டது. இதில் மறைமுகமாக
நீர் நிலைகளைப்பற்றி கூறப்படுகிறது. மஹாபத்ம என்பது ஒரு வித யானையினையும் குறிப்பிடும்.
இந்த நாமம் தலையுச்சியில் அமைந்துள்ள சஹஸ்ரார
சக்கரத்தினைப்பற்றிக் குறிப்பிடுகிறது. இது ஆறு ஆதாரங்களையும் தாண்டி தலைக்கு மேல்
அமைந்துள்ள ஒரு சக்கரமாகும். சஹஸ்ராரத்திற்கு நடுவில் ஒரு துளைவடிவிலலிருக்கும் பகுதி
பிரம்மாந்திரம் அல்லது மஹாபத்மாடவி எனப்படும். பிரபஞ்சத்தில் இருக்கும் தெய்வ சக்தி
இந்த துளையினூடாக மாத்திரமே மனித உடலினுள் இறங்கும். உயந்த உலகங்களுடனான தொடர்பு இந்த
துளையினூடாகவே ஏற்படுத்தப்படுகிறது. இந்த துளை ஆறு ஆதாரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
லலிதை சிவனுடன் சஹஸ்ராரத்தில் இணைகிறாள். இது அவளது சஹஸ்ராரத்திற்கு நடுவே உள்ள உத்தியோகப்பூர்வ
உறைவிடத்தினை குறிக்கிறது.
கதம்பவந-வாஸின்யை (60)
கதம்பவனத்தில் வசிப்பவள்
தேவி தெய்வீக மணத்தினை பரப்பும் கதம்ப வனத்தின்
நடுவில் வசிக்கின்றாள். அவளுடைய சிந்தாமணி க்ருஹத்தினைச் சூழ கதம்ப மரங்களால் நிறைந்த
வனம் காணப்படுகிறது. இயற்கையின் பச்சை நிறம் இங்கு குறிப்பிடப்படுகிறது. இந்த வர்ணணை
மூலம் வாக்தேவிகள் தேவியின் பிருத்வி தத்துவத்தினைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். தேவி
பூமித்தாய் எனவும் அழைக்கப்படுகின்றனர். சிந்தாமணி க்ருஹத்தினை சூழ இருபத்தி ஐந்து
சுவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஒவ்வொரு தத்துவத்தினை குறிப்பவை. கதம்ப வனம்
எட்டாவது தங்கச்சுவரிற்கும் ஏழாவது வெள்ளிச்சுவரிற்கும் இடையில் காணப்படுகிறது.
இங்கு ஒரு முக்கியமான விடயம் அறிந்துகொள்ளலாம்,
ஸ்ரீ சக்கரத்தின் அனைத்து தேவ தேவியரும் இந்த ஏழாவது எட்டாவது சுவர்களுக்கிடையில் இடைத்தொடர்படைகின்றனர்.
வேத முறைப்படி பன்னிரெண்டு மாதங்கள் காணப்படுகின்றன. இந்த பன்னிரெண்டு மாதங்களும் இவ்விரண்டாக
ஆறு ருதுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ருதுவும் ஒவ்வொரு தெய்வத்தால் ஆளப்படுகிறது.
இந்த ஆறு கடவுள்களும் அவர்களுடைய சக்தியுடன் ஸ்ரீ புரத்தில் உள்ள மூன்று தொடக்கம் எட்டாவது
சுவர் வரையிலான பகுதியில் வசிக்கின்றனர்.
தங்கச்சுவரிற்கும் வெள்ளிச்சுவரிற்கும் இடைப்பட்ட
பகுதியில் மந்திரிணி தேவி எனப்படும் ராஜசியாமளை வசிக்கிறாள். இவள் 90 பீஜங்களுடைய மந்திரத்தின்
வித்தையான பிரம்ம வித்தையிற்கு அதிபதி. நாமம் 10 இனை பார்க்கவும்.
வாக்தேவிகள் லலிதை எவ்வாறு இந்த பிரபஞ்சத்தின்
மிக நுண்ணிய அசைவினையும் கட்டுப்படுத்துகிறாள் என்பதனை விளக்குகின்றனர். வார்த்தைப்பொருளினை
வைத்துப்பார்க்கும் போது இந்த நாமத்திற்கு முக்கியமான பொருள் எதுவும் இல்லை. ஆனால்
இந்த சஹஸ்ர நாமத்தில் ஒவ்வொரு நாமமும் உள்ளார்ந்த இரகசிய அர்த்தத்தினையும் மந்திர பீஜத்தினையும்
கொண்டிருக்கும். பொதுவாக இந்த இரகசியங்கள் பொதுவில் பகிர்வதில்லை. இத்தகைய இரகசியங்களை
அறிந்தவர்கள் மிக அரிதானவர்களே உள்ளனர்.
ஸுதா-ஸாகர-மத்யஸ்தாயை (61)
அமிருதக்கடலின் நடுவில் உள்ளவள்.
அமிர்தக்கடலின் மத்தியில் தேவி இருக்கிறாள்.
ஸுதா என்றால் அமிர்தம் என்று பொருள். ஸாஹர் – கடல், மத்யஸ்தாயை - நடுவில். ஸுதா ஸாகரம் சஹராரத்தின் மத்தியில் இருக்கிறது.
சஹஸ்ராரத்திற்கு சற்று முன்னதாக ஸோம சக்கரம் இருக்கிறது. குண்டலினி உஷ்ணத்தினால் எழும்பி
இந்த சக்கரத்தினை அடையும் போது இதிலிருந்து அமிர்தம் வழிந்து தொண்டையினை அடையும் (நாமம்
106). இந்த திரவம் தேனைப்போன்று பாகுத்தன்மையுடையதாகவும் சுவையுடையதாகவும் இருக்கும்.
இந்த திரவம் அமிர்தவர்ஷினி எனப்படும். அமிர்தம் என்பது இறவா நிலைதரும் மருந்து. தேவி
இந்த ஸோமச்சக்கரத்தின் மத்தியில் அமர்ந்து அமிதத்தினை 72,000 நாடிகளினூடாக மனித உடலினுள்
பொழிகிறாள். இந்த அமிர்தம் உடலினுள் முறையாக சேர்ந்தால் உடல் இறப்பில் இருந்து விடுபடும்
எனக்கூறப்படுகிறது. எப்படியாயினும் இது உயர் நிலை குண்டலினி தியானத்தின் மூலமே சாத்தியமான
ஒன்று. இதனாலேயே சித்தி பெற்ற மஹான் கள் பல்லாண்டுகாலம் உயிர் வாழ்ந்தனர்.
சுத்த சிந்து என்பது ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில்
இருக்கும் பிந்துவினையும் குறிக்கும். இது சௌந்தர்ய லஹரி 8வது ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நாமம் மிக முக்கியமான ஒரு நாமமாகும், ஏனெனில் அமிர்தவர்ஷினியினைப்பற்றியும் பிந்துவினைப்பற்றியும்
குறிப்பிடுகிறது.
காமாக்ஷ்யை (62)
கடாக்ஷத்தால் காமங்களைப் பூர்த்தி செய்பவள்
அன்புததும்பும் கண்களை உடையவள். அவளது கண்கள்
இந்த பிரபஞ்சத்தின் மீது அருள், அன்பு, கருணை நிறைந்தவை. அதனாலேயே அவளது கண்கள் மிக்க
அழகானவை. அவளுடைய பார்வை பட்ட பக்தனது விருப்பங்கள் எல்லாம் பூர்த்தியாகும். பொதுவாக
எமது எண்ணங்கள் கண்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. காம என்பது (கா+மா) இரு பீஜாட்சரங்களது
இணைவு. கா என்பது சரஸ்வது, மா என்பது லக்ஷ்மி. இந்த இருதேவதைகளும் லலிதையின் கண்களில்
இருக்கின்றனர். காம என்பது சிவனையும் குறிக்கும். இது தேவி சிவனின் கண்ணாணவள் என்பதையும்
குறிக்கும்.
காமதாயின்யை (63)
விரும்பியதைத்தருபவள்
விரும்புவது எதுவானானலும் அதனை அளிப்பவள்.
இதற்கு பலவித வியாக்கியானங்கள் உள்ளது. காம என்பது காமேஸ்வரனான சிவன். தாயினி என்றாள்
தருபவள் என்று பொருள். முன்னைய நாமங்களின் விளக்களில் சிவன் நேரடியாக அடைய முடியாதவர்,
சக்தியினூடாக மட்டுமே அடையக்கூடவர். தேவி மட்டுமே பக்தர்களை ப்ரகாச வடிவாகிய நிர்குணபிரம்மமாகிய
சிவனிடம் அழைத்துச்செல்லக்கூடியவள். தேவி சிவத்தினை சூழ உள்ள ஒரு திரை போன்றவள். இந்த
திரை விலகாமல் சிவத்தினை அறிய முடியாது. அந்த திரையினை அகற்றுவதற்கும் அவளது அருள்தான்
வேண்டும்.
படைப்புக்கடவுளான
பிரம்மன் தேவிக்கு அளித்த நாமங்கள் இரண்டு; காமாக்ஷ்யை, காமேஸ்வரி.
இந்த நாமங்கள் அவளுடைய எல்லையற்ற அறிவின் நிலையினால் கூறப்பட்டது. பிரம்மா இந்த இரு நாமங்களால் தேவியினை மரியாதைப்படுத்தியதன் காரணம் தேவி தன்னுடைய கண் பார்வை
அசைவினாலேயே பிரபஞ்சத்தின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துகின்றமை. இந்த விளக்கம் தேவியின் விமர்ச ரூபத்தினை பற்றி கூறுகிறது. தாயினி என்றால் உரிமையுடையவள் என்று பொருள். சிவனிற்கு உரிமையுடையவள். அதாவது சிவன் அவளுக்கு மட்டுமே உரியவர் என்பது.
59வது நாமம் இரகசியமாக வாராஹி தேவியையும், 60வது நாமம் சியாமளா தேவியினையும், 61வது நாமம் காமாக்ஷி தேவியையும், 62 வது திரிபுர சுந்தரியினையும் குறிக்கும். இவை மிக சூட்சுமமான விளக்கங்கள்.
இந்த நாமத்துடன் தேவியின் பௌதீக ஸ்தூல ரூபவர்ணணை முடிவுறுகிறது. நாமம் 64 இலிருந்து 84 நான்கு வரை பண்டாசுர வதம் பற்றி கூறப்படுகிறது. இதிலிருந்து தேவியினுடைய அதீத ரூபம் பற்றிய வர்ணணை தொடங்குகிறது. இந்த நாம பாராயணம் மிக இரகசியமான சாதனையாகும்.
*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில் ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்:
http://www.manblunder.com" } சுமனன்
******************************************************************************************************************************************
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.