குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 15, 2019

தலைப்பு இல்லை

ஜோதிடக் கலையின் நோக்கம் என்ன? 
இன்று எதிர் காலத்தைக் கணிக்க, நல்லது நடக்குமா, கெட்டது நடக்குமா என்று அறிய என எமது பிரச்சனைக்குரிய தீர்வினை காணும் ஒரு உத்தியாகவே ஜோதிடம் கருதப்படுகிறது. 
ஆனால் இதன் உண்மை நோக்கம் பற்றி மூல நூற்கள் கூறும் விஷயம் அற்புதமானது. மறையியல் சார்ந்தது. இந்தப் பௌதீகத்தைத் தாண்டிய நுண்ணுலக வாழ்க்கையுடன் தொடர்புபட்டது. 
ஜோதிடத்தின் ஆதி நூற்களில் ஒன்று பராசர ப்ருஹத் ஹோரா சாஸ்திரம் என்பது. இதன் முதலாவது அத்தியாயத்தில் பராசர முனிவரும் அவரது மாணவர் மைத்திரேயரும் சம்பாஷிப்பதாக உரையாடல் வருகிறது. 
ஜோதிடத்தை மனிதன் அறிய வேண்டியதன் நோக்கம் தன்னுள் உள்ள தெய்வத் தன்மையை அறிந்து தன்னை யார் என்று அறிவதற்கான நோக்கத்திற்காக என்று பராசரர் வகுக்கிறார். 
பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளும் தமக்குள் ஜீவாத்ம அமிசத்தையும், பரமாத்ம அமிசத்தையும் கொண்டிருக்கிறது. 
இவற்றுள் தேவதைகளும், கிரகங்களும் பரமாத்ம அமிசங்கள் உடையவை. பூமியில் இருக்கக் கூடியவைகளில் ஜீவாத்ம அமிசமே அதிகமாகவும் பரமாத்ம அமிசம் குறைவாகவும் இருக்கிறது. 
ஆகவே பூமியின் பிறந்த மனிதன் தான் எப்படி பரமாத்ம அமிசம் பெறுவது என்ற வழியினைப் பெறுவதற்கு எமக்கு அருகில் இருக்கும் பரமாத்ம அமிசங்களான கிரகங்களின் துணையைப் பெற வேண்டும். 
பிரளயத்தின் இறுதியில் அனைத்தும் பரம் பொருளுடன் ஒன்றும். 
இந்த இரகசியங்களை அறிய ஜோதிஷ சாஸ்திரம் அவசியம் என்று கூறி இரண்டாவது அத்தியாயத்தை முடிக்கிறார். 
ஆக பராசரரின் முடிவின் படி ஜோதிஷம் தன்னை அறியும் (self realization) இற்கான ஒரு உப அறிவு (வேதமாகவே) கருதப்பட்டிருக்கிறது. 
தற்போது ஜோதிடத்தை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோமா என்பதே சிந்திக்க வேண்டிய விஷயம். 
மூல நூற்களைக் கற்காமல், அதன் நோக்கம் என்னவென்று புரியாமல் அவரவர் வசதிப்படி அறிவினை வளைத்துக் கொள்வது பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்பது ஜோதிடக் கலையின் மூலம் புரிந்துக் கொள்ளலாம். 
மூல நூல் ஆசிரியரான பராசர ரிஷி கிரகங்களை பரமாத்ம அமிசம் என்கிறார். ஆனால் இன்று சனி குடியைக் கெடுக்கிறான், ராகு வாழ்க்கையைப் புரட்டுகிறான் என்று சொல்வது ஜோதிடத்தின் அடிப்படை விதிகளுடன் முரண்படுகிறது. 
ஜோதிஷத்தின் உண்மைப் பயன் என்னவென்று அறிய மூல நூற்களை கற்றுப் புரிதல் அவசியமான ஒன்று என்பதைக் கூறவே இந்தப் பதிவு.

Saturday, December 14, 2019

தலைப்பு இல்லை

அன்புடனும் பாசத்துடனும் எமது திருமண நாளில் எம்மை வாழ்த்திய அனைவருக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகள்!

தலைப்பு இல்லை

கொழும்பில் உள்ள நண்பர் குழாம் Complete work of Swami Vivekananda (CWSV) - ஞானதீபம் நூற் தொகுதியை முறைப்படி கற்க ஆர்வம் கொண்டுள்ளது. 

மாதம் ஒரு முறை ஆர்வமுள்ள நண்பர்கள் ஒன்று கூடி முதலாவது நூலிலிருந்து தொடங்கப்படும். குறித்த மாதத்தில் நூலில் சிறு பகுதிகள் பங்கு பெறுபவர்களால் படிக்கப்பட்டு அவர்களது புரிதல் பகிரப்படும். இப்படி படிப்படியாக முழுத் தொகுதியையும் சேர்ந்து படித்து முடிப்பது இந்தத் திட்டத்தின் இலக்கு! 

இந்த உரையாடலிற்குள் சரி, பிழை வாதங்களுக்கு உட்படாமல் சுவாமி விவேகானந்தர் தனது உரையில் என்ன சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதே அடிப்படை. 

இதன் மூலம் ஒவ்வொருவருடைய புரிதலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் என்பதே எண்ணம். படிக்காதவர்களும் படிப்பதற்குரிய தூண்டலைப் பெறுவதற்காக பங்கு பெறலாம். 

ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குழுவில் இணையுங்கள்: https://chat.whatsapp.com/BXqenTwpxYtLiEZ7iAGaeZ


Friday, December 13, 2019

தலைப்பு இல்லை

மிக நீண்ட காலத்திற்கு முன்னர் சோதிடம் படித்து பின்னர் நிறுத்தியாயிற்று! நேற்று தற்செயலாக புத்தகங்களை அடுக்கும் போது கண்ணில் பட்டது அஷ்டக வர்க்கம் பற்றிய நூல். 

அஷ்டகம் என்றால் எட்டு 

வர்க்கம் என்றால் பலம் என்று பொருள். 

பராசர முனிவர் எழுதிய பராசர ஹோராவில் இந்தக் கணிதம் விளக்கப்பட்டுள்ளது. கணிதத்தில் உள்ள ஒரு வித matrix calculation போன்றது. 

ராகு கேது நீங்கலாக ஏழு கிரகங்களும் லக்கினமும் சேர்ந்து எட்டு விதமான பலங்களை ஒவ்வொரு இராசிக்கும் தரும். 

இந்த பலத்தை கணித ரீதியாக புள்ளிகளைத் தந்து கொள்ளலாம். 

இனி விஷயத்திற்கு வருவோம், இது ஜோதிடப் பதிவு அல்ல, வழமையான தத்துவப் பதிவு தான். 

அஷ்டக வர்க்கம் வாழ்க்கை பற்றிய சுவாரசியமான செய்திகளைக் கூறுகிறது. 

இந்த அஷ்டக வர்க்கம் கூறும் செய்தி என்னவென்றால், 

1) எந்தவொரு மனிதனுக்கும் 337 புள்ளிகள் தான். ஆகவே படைப்பில் அனைவரும் சமம். 

2) ஒரு வீட்டிற்குரிய புள்ளிகள் கூடினால் இன்னொரு வீட்டிற்குரிய புள்ளிகள் குறையும். ஆகவே ஒன்றைப் பெற இன்னொன்றை இழக்க வேண்டும். 

3) அனைத்திலும் புள்ளிகள் சமமாக இருந்தால் சீரான ஏற்றத் தாழ்வு இல்லாத வாழ்க்கை வாழ்வார்கள். 

4) புள்ளிகள் அதிகம் இருக்கும் இராசிகள் எமது வலுவான ஆற்றல்கள்.

5) புள்ளிகள் குறைவாக இருக்கும் இராசிகள் எமது பலவீனமான ஆற்றல்கள். 

6) இவை அனைத்தும் எமது பூர்வ கர்மத்தின் balance sheet account என்பது இன்னும் சிறப்பான விஷயம். 

ஆக ஜோதிஷம் ஒரு SWOT analysis ஆக இந்த அஷ்ட வர்க்கத்தின் படி பயன்படுத்தலாம். 

தன்னிலும், இறை சக்தியிலும் நம்பிக்கை உள்ளவனுக்கு ஜோதிடம் ஒரு decision support tool என்பதே எனது புரிதல்! அப்படியுள்ளவர்களுக்கு அது ஒரு ஒளி விளக்கு!


யோக வாசிஷ்டம் கூறும் யோகசாதனையின் அதிகாரிகள்!

யோக வாசிஷ்டம் என்பது ஸ்ரீ இராமர் தனது குருவான வசிஷ்ட மகரிஷியிடம் தனது ஆன்ம சாதனைக்கான வழிகாட்டலைப் பெற உரையாடிய உரையாடலின் தொகுப்பு நூல்.

இது 32,000 பாடல்களைக் கொண்ட ப்ரஹத் யோக வாசிஷ்டம் என்றும், இதைச் சுருக்கி 6000 பாடல்கள் கொண்ட நூல் லகு யோக வாசிஷ்டம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நூலில் உள்ள சிறப்பம்சம் அதைப் படிப்பவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியைப் பற்றி பேசுகிறது.

ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்ட பலர் தாம் எதற்காக ஆன்மீகத்தில் தேடலை செய்கிறோம் என்பதை ஆழமாக ஆராய்ந்தால் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தோல்விகள், துன்பங்கள் போன்ற காரணத்தால் அதற்குத் தீர்வு வேண்டி!

பலரும் தோல்வி, துன்பத்திற்கான காரணம் என்னவென்ற ஆராய்ச்சிக்குச் செல்ல விருப்பம் இல்லாமல் அதற்குத் தீர்வு என்னவென்ற நிலைக்குள் நின்றுவிடவே விரும்புகிறார்கள், ஏன் இந்தத் துன்பம் என்று கேட்பதில்லை! எதைச் செய்தால் துன்பம் தீரும் என்பதை மட்டும் கூறுங்கள் என்ற மனப்பாங்குடன் இருப்பவர்களே போலி ஆன்மீகவாதிகளிடன் சிக்கிக்கொண்டு அர்த்தம் தெரியாத சடங்குகளுக்குள் மாட்டிக்கொள்பவர்கள்.

எனக்குத் துன்பம் தீரும் வழியைச் சொல்ல முன்னர் துன்பத்தின் மூல காரணம் என்ன என்று தெரியவேண்டும் என்ற உறுதியுடன் தேடலைச் செய்பவனே யோக ஞான மார்க்கத்திற்கு அதிகாரி!

இப்படி துன்பம் நாம் எல்லாவற்றுடனும் பந்தப்பட்டுள்ளோம், அதனால் துன்பமடைகிறோம் என்ற விழிப்புணர்வு பெறுதல் முதல் நிலை!

யோக வாசிஷ்டம் யாருக்குரியது என்றால் " நாம் பந்தப்பட்டுள்ளோம், இதிலிருந்து எப்படி விடுபடுவது?" என்ற சிந்தனை உதித்தவனுக்கு! முழுமையாக ஞானம் பெற்ற ஞானிக்கும், முழுமையான அஞ்ஞானம் பெற்ற அஞ் ஞானிக்கும் இந்த நூல் உரியதல்ல என்று வசிஷ்டர் வரையறுக்கிறார்.

இருவருக்கு இந்த நூல எந்தப்பயனையும் தராது.

அடுத்து அஞ்ஞானி யார்? என்று நான்கு வரையறைகள் தரப்படுகிறது.
  1. தேகமே அகம் என்ற ஜடபுத்தி உள்ளவன்; நான் இந்த உடல் மாத்திரம்தான் என்ற எண்ணம் கொண்டவன் அதற்கு மேல் எந்தக்காரணமும் இருக்கலாம் என்ற முயற்சியைச் செய்ய மாட்டான்.
  2. எனது புலன்களால் பார்க்கப்படும் உலகம் மாத்திரமே சத்தியம், அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற நினைப்பு உள்ளவன்.
  3. புலன்களால் மாத்திரமே மகிழ்ச்சி உள்ளது என்று நம்புவன்.
  4. உண்பது, மது அருந்துவது, உறங்குவது, உடலின்பம் பெறுவது மாத்திரமே வாழ்க்கையின் நோக்கம்

என்ற இந்த நான்கு எண்ணங்களைக் கொண்டவனால் யோகப்பாதையில் பயணிக்க முடியாது.

மேற்கூறிய நான்கு எண்ணங்களுக்கும் மேலாக உண்மை இருக்கிறது என்ற பிரித்தறியும் புத்தி உள்ளவர்கள் முமுக்ஷுக்கள் எனப்படுகிறார்கள்.

இப்படி முமுக்ஷுத்துவத்துடன் ஆன்ம சாதனை முயற்சி செய்பவர்கள் ஜிக்ஞாசுக்கள் எனப்படுகிறார்கள்.

தலைப்பு இல்லை

இன்று எமது திருமண நாள்! 

அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா!

ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திட பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா! 

என எமக்காகவும் உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறோம்!


Thursday, December 12, 2019

தலைப்பு இல்லை

இன்று வெள்ளவத்தை கிரியா பாபாஜி யோக ஆரண்யத்தின் 11வது ஆண்டு விழா மலர் "ஆரண்யப் பிரசாதத்தில்" எமது "இல்லற யோகம்" என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. 

கட்டுரையைப் பிரசுரித்த மலர் குழுவினரிற்கு நன்றிகள்!


தலைப்பு இல்லை

இன்று தத்தாத்திரேய ஜெயந்தி!

ஆத்திரேயர் எனப்படும் அத்ரி மகரிஷிக்கும் அனுசூயைக்கும் மும்மூர்த்திகளாலும் தத்தம் பண்ணப்பட்ட ஆத்ரேயர் - தத்தாத்திரேயர். 

அத்ரி என்றால் புலன்களை வென்றவர் என்று அர்த்தம். 

அசூயை என்பது மற்றவர்களின் சிறப்புக் கண்டு பொறாமை கொண்டு வெதும்பும் மனதின் இயல்பு, அனுசூயை என்றால் அசூயை வென்றவர் அல்லது அசூயையை தன்னுள் அனுமதியாதவர் என்று பொருள். இப்படியான இருவருக்கும் மகனாக வாய்த்தவர் தாமச, ராஜச, சத்துவம் எனும் முக்குணங்களையும் வென்ற அவதூதர். 

ஆக புலன்களை வென்ற மனம் இறுதியில் அசூயையும் வென்றால் பூரண விழிப்புணர்வினைப் பெறும் என்பதே தத்தாத்ரேய தத்துவம். 

எம்மில் இருக்கும் விழிப்புணர்வு (mindfulness) சரியாக இருந்தால் உலகில் உள்ள அனைத்தும் ஞானத்தினைப் புகட்டும் என்பதை தனது 24 குருமார்கள் யார் என்று கூறி விளக்கியவர். 

இதற்கு மேல் அவர் தன்னுடைய உடல் எப்படி தனக்கு ஞானத்தினைத் தந்தது என்பது பற்றியும் கூறுகிறார். 

இன்று குரு என்று எவரையாவது, எதையாவது பற்றிக் கொண்டு விழிப்புணர்வு இல்லாமல் நம்பிக்கை மட்டுமே அடிப்படையில் ஆன்மீகம், யோகம் போன்றவற்றை அணுகுபவர்களுக்கு தத்தாத்திரேயர் குரு தத்துவத்தின் இரகசியத்தை விளக்குகிறார். 

எம்மில் இருக்கும் உணர்வு - consciousness - விழிப்புணர்வாக - mindfulness இருக்கும் போது அக குரு எம்மில் விழிப்படையும் போது எம்மை சூழ உள்ள அனைத்தும் புற குருவாக வழிகாட்டும் என்பது தத்தாத்ரேயரின் ஞானம்


Wednesday, December 11, 2019

சாதனையைத் தவறவிட்டல் மனம் மிகவும் துன்பமடைகிறதே?

என்னால் ஒரு நாள் கூட சாதனை செய்யாமல் இருக்க முடியவில்லை, அப்படி இருந்தால் வெறுமையாகவும் துன்பமாகவும் உணர்கிறேன்?

இப்படி பலசாதகர்கள் அனுபவமாக உணர்கிறார்கள்.

இந்த நிலை சரியானதா? பிழையானதா?

ஒருவிதத்தில் சாதனை மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறீர்கள் என்ற நிலையில்,

இன்னும் பரிபூரணமாக உங்கள் ஆளுமை தெய்வ ஆளுமையாக மாறவில்லை என்ற அளவில் நல்லது!

ஆனால் அடிப்படையில் குடிகாரனுக்கு சாராயம் குடிக்கவில்லை என்றால் ஏற்படும் ஒருவித போதை நிலைக்கு மனதை ஆழ்ப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்ற அளவில் நீங்கள் சம நிலையில் இல்லை என்றால் பிழையானது.

சாதனையைத் தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது என்பது மிக அவசியமான பண்பு, இதற்கு சிரத்தை என்று பெயர்!

ஆனால் நாம் உலகவாழ்க்கையில் இருக்கிறோம், பலவித கடமைகளைச் செய்கிறோம் என்ற அளவில் யதார்த்த நிலையினைப் புரிந்துகொள்ள வேண்டும். எமது தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் எமது சாதனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வீட்டில் பிள்ளைகள் உள்ள அம்மாவிற்கு அதிகாலை வேளை கணவனும் பிள்ளைகளுக்கும் உணவு தயாரிக்க வேண்டும், எட்டு மணிக்கு எல்லா வேலைகளும் முடிந்த பின்னர்தான் ஓய்வு கிடைக்கும் என்றால் அதற்கேற்றால் போல் நேரத்தை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும். இல்லாமல் எமது கடமைகளைத் தள்ளி வைத்து விட்டு சாதனை செய்கிறேன் என்று வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது சாதனையின் நோக்கம் தெரியாமல் இருக்கிறோம் என்று அர்த்தம்.

சிரத்தையும், சோம்பலும், இறைசக்தியும் இன்று துன்பப்படும் நாம் அவற்றை சாதனையில் கொண்டு வந்து பின்னர் அதை வாழ்வின் ஒவ்வொரு விஷத்திலும் குடும்பம், தொழில், நட்புகள் அனைத்திலும் கொண்டுவருவதே சாதனையின் நோக்கம்.

வாழ்வின் அடிப்படை சாதனை, அதற்கான எமக்கு கர்மத்தால் அமைந்த வாழ்வினை, கடமைகளை வலிந்து வெறுத்து ஓடக்கூடாது.

ஆகவே சாதனை தவறவிட்டால் அதற்கு மனம் வருந்துவது கூடாது, ஏன் தவற விட்டோம் என்பதை விழிப்புணர்வுடன் ஆராய வேண்டும். காரணத்தைக் கண்டுபிடித்து அதை உடனடியாக திருத்திக்கொண்டு அடுத்த நாளிலிருந்து சாதனையைத் தொடரவேண்டும்.

அதை விடுத்து அதிக மனவருத்தம் அடைகிறோம் என்றால் நாம் சம நிலையில் இல்லாமல் எம்மை நாமே வருத்துகிறோம் என்று அர்த்தம். மனதிற்கு தாழ்வுமனப்பான்மையினை ஏற்படுத்தும் எதைச் செய்வதும் ஆன்ம முன்னேற்றத்திற்கு எதிரானது.

இல்லற யோகம்


இல்லறம் என்பது வாழ்வில் மிகப்பெரிய ஆன்ம முன்னேற்றத்தை அடைவதற்கான வாய்ப்பு. அது புனிதமானது, அர்த்தமுள்ளதும் முக்கியமானதுமாகும். பூரணமற்ற இரு ஆன்மாக்கள் கணவன் மனைவியாக ஒற்றுமையாக இணைந்து பூரண வாழ்க்கையை மேற்கொள்ளும் நிகழ்வு அது. இரண்டு இறக்கைகள் கொண்ட பறவைகள் போல அல்லது சக்கரங்கள் கொண்ட தேர் போல ஆணும் பெண்ணும் இணைந்து வலிமையான உறுதியான ஒரு தொகுதியை உருவாக்கும் நிகழ்வு இல்லறம். உளவியல் நிபுணர்களுக்குத் தெரியும் ஆண்களதும் பெண்களதும் பலமும், பலவீனங்களும் என்னவென்று. ஒருவர் மற்றொருவரது பலவீனத்தை நிரப்பும் பலமாக செயற்படுவதே. ஆணும் பெண்ணும் கவர்ச்சியுறுவது மற்றவரின் ஆற்றலைப் பெற்று தன்னை பலப்படுத்திக்கொள்ளவே. எப்பொழுதும் எமது ஆழ்மனம் எமது பலவீனத்தை பூர்த்தி செய்து வலிமையடைவதற்குரிய மார்க்கத்தைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. இதுவே ஒவ்வொருவருக்கும் இருக்கும் நட்பிற்கும் உறவினைத் தேடுவதற்குமான காரணமாகும்.   ஒரு குருடன் மற்றவர்களின் உதவியுடன் தான் நடமாடுவதுபோல் தம்பதியினர் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் வேண்டும்.
அடிப்படையில் ஆண்கள் கூடாதவர்கள், பெண்கள் கூடாதவர்கள் என்ற பொதுமைப்பாட்டுக்கருத்துடன் ஒருவர் மற்றொருவரது ஆன்மீக வாழ்க்கைக்கு தடையானவர்கள் என்ற கருத்து தவறானது. எல்லோரும் இறைவனின் படைப்பே. அனைவருக்குள்ளும் அந்த இறைவனின் ஒளி மறைந்து இருக்கத்தான் செய்கிறது. ஆண் வீட்டிற்கு வெளியே அதிகம் புழங்குவதால் அவனது வெளிப்புற ஆளுமை விருத்தியடைகிறது. வலிமையான, மற்றவர்கள் மேல் செல்வாக்குச் செலுத்தும் புத்திசாலித்தனம் விருத்தியடைகிறது. ஆனால் தொடர்ச்சியான இந்தப்போராட்டத்தால் அவன் தனது அகத்தில் ஆன்மாவின் நல்ல பண்புகளை இழந்து விடுகிறான்.   அதனால் எளிமை, உயிர்ப்புடன் செயலாற்றுதல், நேர்மை, தியாகம், கருணை, அன்பு ஆகிய நல்லுணர்ச்சிகள் ஆணைவிட பெண்ணிலேயே அதிகம் காணப்படுகிறது. பெண்கள் குணத்தில் ஆணைவிட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். பலரும் கூறுவதுபோல் பெண் மாயையின் உரு, பெண்ணுடன் இருந்தால் ஆன்மீக நிலை தவறிவிடும் என்பது தவறான கருத்து. பெண்ணுடன் இருக்கும் ஒரு ஆண் தனது அரக்க இயல்பினை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அவளது அன்பும் அருளும் அழகிய நதிபோன்றது, அது அவனது மனதைச் சுத்தி செய்து, மனதைப் பாவங்களிலிருந்து விடுத்து துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யக்கூடியது.
பாவங்களும் புண்ணியங்களும் வெளிப்படையாகச் செய்யும் செயல்களில் மட்டும் இல்லை. நாம் எமக்குள் எண்ணும் எண்ணமும் செயலிற்கான நோக்கமும் காரணமாகும். தன்னலமும் தன்னலமின்மையும், நற் செயல்களும், தீய செயல்களும் வெளியே செய்யப்படும் செயல்களால் தீர்மானிக்கப்படுவதில்லை, அந்தச் செயலைச் செய்வதற்கு தூண்டிய மனப்பாங்கு எது என்பதைப் பொறுத்தே அமைகிறது. இறைவனின் நீதிமன்றத்தில் வெளிப்புறச் செயல்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. செயலிற்குப் பின்னால் இருக்கும் நோக்கமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
இல்லறம் இல்லாவிட்டால் எப்படி நல்ல பழக்கவழக்கங்களுடைய குழந்தைகள் உருவாகுவார்கள்? எப்படி உயர்ந்த யோகிகள் உருவாகுவார்கள்? இல்லற யோகம் எல்லாவிதமான ஆன்மீக சாதனைகளையும் பயிற்சித்து சித்தி செய்யக்கூடிய புனிதமான ஆன்ம முன்னேற்றம் தரக்கூடிய ஒரு அரிய வாழ்க்கை முறையாகும். எந்தவொரு குடும்பஸ்தனும் தனது குடும்ப வாழ்க்கையால் தனது ஆன்மீகம் இல்லாமல் போகிறது என்று எக்காலத்திலும் எண்ணக்கூடாது. அடிப்படையில் திருமண வாழ்க்கைக்கும் திருமணமற்ற வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒவ்வொருவருடைய தேர்வும் அவரவர் வசதி, ஆர்வம், வாழ்க்கைமுறையில் தங்கியுள்ளது. யாருடைய வாழ்க்கை முறை மனைவி பிள்ளைகள் என்று அதிக பொறுப்புகளைச் சுமக்க முடியாதபடி இருக்கிறதோ அவர்கள் திருமணமற்ற வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். யாருக்கு உறுதியான வாழத் தேவையாவான வசதிகளும் மனப்பண்பும் இருக்கிறதோ அவர்கள் திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த வாழ்க்கையத் தேர்ந்தெடுத்தாலும் தூய, தன்னலமற்ற, ஆன்ம முன்னேற்றம் விளையும் நோக்கம் இருந்தாலும் அங்கு துரித முன்னேற்றம் நடைபெறும்.
அடுத்து இல்லறயோகத்தின் அடிப்படைகளைப் பற்றிப்பார்ப்போம். வாழ்வின் அடிப்படை இந்த ஜீவான்மா இறுதியாக பரமான்மாவை அடைதாலாகும். எமது சுய நல எண்ணங்ககளைத் துறந்து அனைத்து உயிர்களும் நலமாக வாழச் செய்யக்கூடிய ஆன்மீகச் செயல்கள் சாதனை எனப்படுகிறது. இந்த சாதனாவை வாழ்வில் செய்வதற்கு பலவிதமான முறைகள் இருக்கிறது. இல்லற யோகம் ஒரு வழியாகும். ஒரு குழந்தை தனது திறனகளை வளர்த்துக்கொள்ளும் இடம் வீடாகும். தனது வாழ்க்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட திறனை வளர்த்துக்கொள்ளும் இடம் வீடாகும். ஆகவே எமது அகத்தைப் பண்படுத்தும் சாதனையும் தொடங்கப்பட வேண்டிய இடம் வீடாகும்.  வாழ்வில் மேன்மை, சுயகட்டுப்பாட்டுடன் நாகரீகமாகவும், சுய சார்புடையவரகளாகவும் உருவாக மிகச்சிறந்த இடம் வீடாகும். இதைச் சாதிப்பது வீட்டில் இலகுவாக இருக்கும், ஏனென்றால் வீட்டில் இயல்பாகவே அன்பு, பொறுப்பு, கடமை, ஒருவரை ஒருவர் தங்கியிருத்தல், ஒற்றுமை என்பன காணப்படுகிறது. வீடு மற்றவர்களது தாக்கம் இன்றி எம்மை நாமே வளர்த்துக்கொள்ள நல்ல இடம்.
இல்லற யோகத்தினைத் தேர்ந்தெடுக்கும் சாதகன் கீழ்வருமாறு தனது சிந்தனையில் தியானானிக்க வேண்டும்.
·       குடும்பமே எனது சாதனைக்கான புனித ஆசிரமம். எனது பூஜை அனுஷ்டானங்கள் என்பது எனது வீட்டினையும் குடும்பத்தினையும் அழகாகவும், நறுமணமுள்ள, வளமான தோட்டத்தைப் போன்று ஆக்குவதற்கு எனது சக்தி முழுவதையும் செலவழிப்பேன். கடவுள் மேலுள்ள பக்தி என்பது என்மீது நம்பிக்கை வைத்து எனக்குத் தரப்பட்டுள்ள எனது பொறுப்புக்களை சரிவரச் செய்வது. மலர்த்தோட்டத்தை நீரூற்றி, பராமரித்து செழிப்படையச் செய்வது போன்று நானும் எனது குடும்பத்தவர்கள் அனைவரது வாழ்வினையும் செழிப்படையச் செய்வேன். எனது குடும்பத்தில் எவரையும் சிறியவர், பயனற்றவர், எனது சேவையினைப் பெறத் தகுதியில்லாதவர் என்ற எண்ணத்தினைக் கொண்டிருக்க மாட்டேன், சுய கட்டுப்பாட்டுடன் இருப்பேன். நானே அதிகாரி, வழிகாட்டி, தலைவர், எல்லாவற்றையும் முடிவெடுப்பவன் என்ற அகங்காரம் கொண்டிருக்கமாட்டேன். எப்போதும் சுய கட்டுப்பாட்டுடன் முடிவெடுப்பேன்.  நான் கருணையுடனும், சுய நலமற்று எனது சேவையை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு ஆளுமையினையும் விருத்தி செய்யப் பாடுபடுவேன்.
·       எனது சரணாகதி என்பது கடமையுடன் எதையும் எதிர்பார்க்காமல் தூய மனதுடன் மற்றவர்களுக்கு சேவை செய்வது.. எனது தவம் என்பது எனது குடும்பத்தவர்கள் அனைவரும் வசதியாக, மகிழ்வுடன் வாழ்வதற்குரிய வழிமுறைகளைச் செய்வது.
·       எனது யாகம் என்பது உலகமும், எனது குடும்பத்தவர்களும் உண்மையுடனும், நேர்மையுடனும், பொறுப்புணர்வுடனும், அமைதியாகவும், மகிழ்வாகவும் வாழ்வதற்குரிய செயல்களைச் செய்வது.
·       எனது மத உறுதிமொழி என்பது எனது நடத்தையும், செயலும் தூய்மையாகவும், இலட்சியமுடையதாகவும், மற்றவர்களை உத்வேகப்படுத்தும் படியாகவும், மற்றவர்கள் என்னைப் பார்த்து பின்பற்றும் ஆளுமையுடையதாகவும் புனிதமடையச் செய்வது.
·       எனது சுய கட்டுப்பாடு என்பது எனது குடும்பத்தினர் அனைவரையும் சரியான வழியில் பணம் ஈட்டுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது.
·       எனது ஆராதனை என்பது அன்பும், கருணையும் நிறைந்த மனத்துடன் மகிழ்ச்சி, ஆனந்தம், ஒற்றுமையினை குடும்பத்திலும், சமூகத்திலும் உருவாக்கப் பாடுபடுவது.
·       எனது பூஜை என்பது எனது குடும்பம் எனும் கோயிலில் வாழும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி குடும்பத்தில் நல்லெண்ணங்கள், நற்பழக்க வழக்கங்கள், நல்ல நடத்தைகளை உருவாக்க   பாடுபடுவது.
·       தினசரி எனது காயத்ரி சாதனையில் உண்மையுடன் இருக்கிறேன் என்பதை  ஆத்மார்த்தமாக இருத்தல். நான் பற்றற்ற கர்மயோகி, எனது சந்தோஷமும் திருப்தியும் என்பது உண்மயான அர்ப்பணிப்புடன் வெற்றி தோல்வி பற்றிய எந்தக்கவலையும் இன்றி தினசரி சாதனையைத் தொடர்தல்.  நான் உண்மையுடனும், சரியான வழியிலும் எப்போது இருப்பேன் என்ற உறுதிமொழியுடன் சரியான உண்மையான வழியைப் பின்பற்றுவேன் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுதல்.
·       இந்த உறுதிமொழிகள் அனைத்தையும் ஒவ்வொரு இல்லறயோகியும் முழுமனதுடன் இதயப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.    
  ஒவ்வொரு இல்லறத்தவர்களும் கடைப்பிடிக்கக்கூடிய எளிய உயர்ந்த சாதனை குரு அகத்திய காயத்ரி சாதனா உபதேசமாகும். இதில் காணப்படும் குருமந்திரம், சங்கல்பம், மந்திர ஜெபம், சித்த சாதனை என்ற அமிசங்கள் ஒருசாதகனின் அந்தக்கரணத்தில் துரிதமுன்னேற்றத்தினை ஏற்படுத்தும் வழிமுறையாகும்.
எல்லா உன்னத ரிஷிகளும் இல்லற யோகவாழ்க்கை வாழ்ந்த சாதர்களின் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்து அரிய சாதனைகளைச் செய்தார்கள். சில புத்திக்குறைவான நபர்கள் இல்லறம் மாயையால் ஆனது, லௌகீகயமயமானது என்று கூறுவது உண்மையானால் எப்படி இராமர், கிருஷ்ணன், புத்தர், நபிகள், காந்தி போன்றோர் வந்திருக்க முடியும். எப்படி பதிவிரதைகளான சீதை, சாவித்ரி, மதலசா, தமயந்தி, பார்வதி போன்றோர் இருக்க முடியும். துருவன், பிரகலாதன், நசிகேதன் போன்ற தெய்வக்குழந்தைகள் உருவாகியிருக்க முடியும். இவர்கள் அனைவரும் ஆன்மீக உலகின் மாணிக்கம் போன்றவர்கள். மற்றைய அனைத்து ஆசிரமங்களான பிரம்மச்சாரிய, வானப்பிரஸ்த, சந்நியாச ஆசிரமங்கள் அனைத்தும் கிரகஸ்த ஆசிரமத்திலிருந்தே தோற்றம் பெறுவதால் இந்த இல்லறம் என்பது அனைத்து ஆசிரமங்களினதும் தந்தை என்று கூறுவது மிகையில்லை. ஆகவே இல்லறத்தைக் கேவலப்படுத்துவது தந்தையைக் குறைகூறுவது போன்றதும், சமூக முன்னேற்றத்தினைத் தடை செய்வதுமாகும்.
{இந்தக்கட்டுரை குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம்சர்மாச்சார்யாவின் க்ருஹஸ்த யோகம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது}


{இன்று வெள்ளவத்தை கிரியா பாபாஜி யோக ஆரண்யத்தின் 11வது ஆண்டு விழா மலர் "ஆரண்யப் பிரசாதத்திக்" எமது "இல்லற யோகம்" என்ற இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.}

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...