பதஞ்சலி யோகத்தில் சித்தம் என்ற சொல் மிக முக்கியமானது. சித்தம் என்ற மனதின் பகுதியில் எழும் விருத்திகளை நிரோதம் செய்வதுதான் யோகம் என்று பதஞ்சலி வரையறுக்கிறார்.
சித்தம் என்பது எமது புலன்களால் பெற்ற அனுபவங்கள் அனைத்தையும் பதிவு செய்துகொள்ளும், கணனியில் hard disk போன்ற ஒரு பகுதியாகும். இந்த சித்தத்தில் ஏற்படுத்தும் பதிவுகள் அனைத்தும் சம்ஸ்காரங்கள் எனப்படும். சம்ஸ்காரங்கள் என்றால் நாம் பெற்ற அனுபவங்கள் விதை வடிவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலை.
இந்த சம்ஸ்காரம் ஒருவனில் ஐந்து விதமாக சேருகிறது;
1) ஆன்மாவின் சுய இயல்பான ஸத், சித், ஆனந்தம்
2) முற்பிறவியில் ஐம்புலன்கள் மூலம் பெற்ற அனுபவங்கள்
3) தாய், தந்தை குடும்பத்தினரால் புகுத்தப்பட்ட சம்ஸ்காரங்கள்
4) வாழும் சூழல் புகுத்தும் சம்ஸ்காரங்கள்
5) தனது இச்சசக்தியால் சிந்தித்து தானே உருவாக்கிக்கொள்ளும் சம்ஸ்காரங்கள்.
இந்த ஐந்து சித்தப்பதிவுகளின் அடிப்படையிலேயே ஒருவனின் மன எண்ண ஓட்டம் ஆரம்பமாகி, பின்னர் அது அவனது பழக்கமாக மாறி அவனது வாழ்க்கையை முன்னேற்றவோ தாழ்த்தவோ வைக்கிறது.
ஒரு மனிதன் நல்ல வாழ்க்கையைப் பெற வேண்டும் என்றால் அவன் மேற்குறித்த ஐந்து வழிகளிலும் நல்ல சம்ஸ்காரங்களைப் பதித்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் தேவையற்ற சம்ஸ்காரங்களைப் பதித்துக் கொள்வதால் தவறான பழக்கவழக்கத்திற்கு உள்ளாகி வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்கத் தொடங்குவான்.
இப்படி தம்முள் ஏற்றுக்கொண்டு பதிப்பிக்கப்பட்ட சம்ஸ்காரங்களால் எழும் எண்ண விருத்திகளை நிரோதம் செய்து தமது சித்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுவதே பதஞ்சலி கூறும் அந்தரங்க யோகம் - தாரணை, தியானம், சமாதி!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.