இந்த பிரபஞ்சம் படைக்கப்படிருப்பது ஐம்பூதங்களால் என்று சித்தர் – இந்திய தத்துவம் கூறும். மேலைத்தேய ஆன்மீகர்களும் இந்த ஐம்பூதக் கொள்கையினை ஏற்றுக்கொள்கிறார்கள். வெறுமனே தத்துவத்தை பிரயோகித்து பயன்படுத்தாத நூலறிவாளர்கள் மேலைத்தேய ஆன்மீக கோட்பாட்டில் நான்கு பூதங்களே உள்ளன என கூச்சலிடுவதை கேட்க கூடியதாக இருக்கிறது. அத்தகையவர்கள் இந்த கட்டுரையினை கடைசி வரை வாசியுங்கள். இந்த கட்டுரையில் எப்படி இந்த பஞ்ச பூதக்கொள்கையினை மூலிகை, தாவரம் என்பவற்றிற்கு பிரயோக ரீதியாக பாவிப்பது என்பது பற்றி சொல்லித்தரப்போகிறேன். இன்று பலர் சித்த மருத்துவம், ஆயுள்வேதம் படித்த பல மருத்துவர்கள் பஞ்ச பூதத்தின் செய்கையினை பிரயோக ரீதியில் பயன்படுத்துவதில்லை. இதனால் இவை வேறு கோட்பாட்டு அறிவு என்ற வகையில் பார்க்கப்பட்டு ஏளனாமாக பார்க்கப்பட்டு வருகிறது. பொதுவாக சித்த வைத்தியர்கள் மூலதத்துவம் என்றால் ஏளனமாக ஒன்றுக்கும் உதவாதது என்ற பார்வையில் பார்த்து தமது தனித்துவத்தை இழந்து வருவதை இன்று அவதானிக்க கூடியதாக இருக்கிறது. அத்தகையவர்களுக்கு இந்த சிறு கட்டுரை ஒரு ஒளிவிளக்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எமது சித்தாந்தம் பெரும் பிரளயத்தில் இருந்து உலகம் மெதுவாக தோன்றியதாக கூறுகிறது. பிரளயம் என்பது குழப்பமான தன்மை (chaos), இந்த பிரளயத்தின் அதிர்வினையையே நடராஜர் என்று குறித்து வைத்தனர். இந்த பிரளய குழப்பத்தில் இருந்து ஒரு ஒழுங்கு தோன்றியதை பஞ்சீகரணம் என்றார்கள். இந்த பஞ்சீகரணத்தில் ஆகாயத்தில் இருந்து, வாயு, வாயுவில் இருந்து அக்னி, அக்னியில் இருந்து அப்பு, அப்புவில் இருந்து பிருதிவி என்று ஒழுங்கில் பூதங்கள் பிரிந்தன. இவற்றில் ஆகாயம் தவிர்ந்த மற்ற நான்கும் மனிதனால் ஸ்தூல புலன்களால் உணரக்கூடியவை. ஆகாய பூதம் மனிதனை மனிதன் என்று கூறுவதற்கு காரணமான மனமாக, உணர்வாகிய ஆன்மாவுடன் சேர்ந்து மனிதனில் மாத்திரம் முழுமையாக இயங்குகிறது. ஆகாய பூதத்தை தனது மனத்தால் ஆட்சி செய்ய கூடியவன் மனிதன் என்பதாலேயே மனிதன் இன்று சக்தி வாய்ந்த உயிரினமாக விளங்குகிறான். மற்றைய உயிரினங்களில் இந்த ஆகாய பூதம் அவை உருவாவதற்கு உரிய மூலசக்தியாக இருக்கின்றதே அன்றி முழுமையாக செயற்படுத்த கூடிய நிலையில் இல்லை, இன்னொரு வார்த்தைகளில் கூறுவதானால் மற்ற உயிரினங்களில் மனம் ஒரு உணரும் கருவியாக மாத்திரம் இருக்கின்றதே அன்றி, தனது உணர்வின் இச்சையால் செயற்படுத்தப்படும் கருவியாக இல்லை.
இதனால் மேலைத்தேய ஞானிகள் எல்லாவற்றிற்கும் பொதுவான வாயு, அக்னி, அப்பு, ப்ருதிவி ஆகிய நான்கையும் four element என்றும் உணர்வுடன் கூடிய மனதிற்கு மூலமான ஆகாயத்தை ஐந்தாவது பூதமாக “quinta essential” ஆக குறிப்பிடுகின்றனர். quinta essential என்பது ஆகாய பூதத்தில் இருந்து உருவான மனமும், உணர்வாகிய ஆன்மாவும் சேர்ந்த கலவை. ஆனால் சித்தர் தத்துவத்தில் அண்ட ஆகாயத்தை ஆகாய பூதம் எனவும் பிண்டத்தில் அது உருவாகும் நிலையினை அந்தக்கரணங்கள் என்றும், உணர்வை தனியே ஆன்மா என்றும் வகைப்படுத்தி வைத்தனர். ஆகவே சித்தர் தத்துவம் மிகவும் நுண்மையாக பகுக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பியல்பு!
பஞ்சீகரண தத்துவ அடிப்படையில் பார்த்தால் எந்த ஒருபூதமும் தனித்த ஒரு நிலையில் பூதமாக இல்லை. ஒன்றில் இருந்து மற்றொன்று உருமாற்றப்பட்டே பூதங்கள் உருவாகின்றன.
இந்த ஐந்து பூதங்களும் வெறுமனே ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்ட கற்கள் போல் காணப்படவில்லை. ஒவ்வொரு பூதமும் தான் அடுத்த பூதமாக மாறுவதற்குரிய ஆற்றலை கொண்டிருக்கின்றன. இந்த ஆற்றலால் தான் அவை அழிவிற்கும் உட்படும்போது ஒன்றுடன் ஒன்று கலந்து மீண்டும் தனது ஆரம்ப நிலைக்கு செல்லக் கூடியதாக இருக்கின்றது. அதேபோல் ஒரு பூதம் மற்றொரு பூதமாக மாறுவதற்குரிய பண்பினையும் கொண்டிருக்கும். இதற்கு ஒவ்வொரு பூதத்திற்கும் இரண்டு இயல்புகள் காணப்படும்;
- முதலாவது அதன் அடிப்படை பண்பு
- இரண்டாவது அது மற்றைய பூதமாக உருமாறுவதற்குரிய இயல்பு
அக்னியை எடுத்துக்கொண்டால் அதன் அடிப்படை உஷ்ணம், மற்றைய பூதமாக உருமாருவதற்குரிய பண்பு வரட்சி,
ப்ருதிவியை எடுத்துக்கொண்டால் அடிப்படை வரட்சி, மற்றைய பூதமாக உருமாருவதற்குரிய பண்பு குளிர்ச்சி.
நீரை எடுத்துக்கொண்டால் அடிப்படை குளிர்ச்சி, மற்றைய பூதமாக உருமாருவதற்குரிய பண்பு ஈரம்,
வாயுவினை எடுத்துகொண்டால் அடிப்படை ஈரம், மற்றைய பூதமாக உருமாருவதற்குரிய பண்பு உஷ்ணம்.
இந்த அடிப்படையினை வைத்துக்கொண்டு இரண்டு எதிர் எதிர் பூதங்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
- நீரும் அக்னியும்
- நிலமும் வாயுவும்
அடுத்த பாகுபாடு
- நீரும் நிலமும் பாரமானவை, இவற்றின் செயல் மெதுவானவை
- அக்னியும் வாயுவும் இலகுவானவை, இவற்றின் செயல் விரைவனவை
இதனை சற்று விரிவாக விளங்கி கொள்வோம். அக்னியை புனிதமானது என்று கூறுவதன் பொருள் இது இலகுவானதும், உஷ்ணமானது, நிறத்தினை தருவது, தன்னுடன் சேரும் பொருட்களை உருமாற்றக் கூடிய ஆற்றல் இருப்பதாலும், இது தூய்மைப்படுத்தும். ப்ருதிவி தத்துவம் பாரம் கூடியது, குளிர்ச்சியானது, பிருதிவி தத்துவம் சரியான விகிதத்தில் மனதில் கொண்டு வரக்கூடியவர்களது எண்ணம் உறுதியானதாக இருக்கும். அப்பு பூதம் பாயக்கூடியது, உணர்ச்சி மிக்கது, எல்லாவற்றுடனும் கலக்க கூடியது. வாயு பூதம் எங்கும் பரவக்கூடியது, உஷ்ணமானது, அசையக்கூடியது. மனிதனில் உருவாகும் எண்ணங்கள் வாயுத்தன்மை உடையவை.
இந்த பூதங்கள் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிலும் வேறு வேறு விகிதத்தில் கலந்துள்ளது.
இனி மூலிகை, தாவரங்களில் இந்த பூதங்கள் எப்படி செயல் கொள்கிறது என்று பார்ப்போம்.
பொதுவாக தாரவரங்களின் வேர்ப்பகுதி, கிழங்கு என்பன ப்ருதிவி தத்துவம், அப்பு தத்துவம் இலைகளிலும், தாவர சாறுகளிலும், மணமும், இலகுத்தன்மையும், அக்னி தன்மை பழுத்த பழங்களிலும், விதைகளிலும் காணப்படும்.
இதை வைத்துக்கொண்டு பொதுவான தாவர வர்க்க சரக்குகளை இலகுவாக வகைப்படுத்திக்கொள்ள முடியும்.
மனித உடலில் எலும்பும், நரம்பும் ப்ருதிவி தத்துவம், நிணநீர் தொகுதியும், பாய்மங்களும் அப்பு தத்துவம், சுவாசத்தொகுதி வாயு தத்துவம், எல்லாவற்றையும் இணைத்து உயிர்ப்புடன் வைத்திருக்கும், உடல் சூட்டினை காக்கும் இரத்தம் அக்னி தத்துவம். இந்த அடிப்படையினை வைத்துக்கொண்டு உடலின் தன்மைகளை அறிய முடியும்.
பூமியை எடுத்துக்கொண்டால் பாஷாணம் முதலான தாது வர்க்கம் அனைத்தும் ப்ருதிவி பூதத்தின் தன்மை அதிகமாகவும், அப்புத்தன்மை தாவர வர்க்கத்திலும், வாயு பூத தன்மை விலங்கிலும், அக்னி தன்மை மனித இனத்திலும் அதிகமாக இயற்கையாகவே உள்ளது.
மனித இனம் ஒரு வினோதமான இனம், எமது முன்னோர்கள் உலகை அறிவதற்குரிய ஞானத்தை எளிமையாக சுருக்கி பஞ்ச பூதமாக்கி நான்கு பூதங்களை உனது புலன்களால் அறியலாம் என்றும் அதனை அறிவதற்கு உரிய மனதை ஆக்கும் எல்லாவற்றுக்கும் மூலமான ஆகாயம் எனவும் கூறி வைத்தனர். இது ஒரு எளிய பிரயோக கோட்பாடு. ஆனால் நாம் இன்று இரசாயனவியல் என பாவிக்கும் மூலகங்கள் எவற்றையும் கண்களால் காணமுடியாது. அணுக்களின் வடிவம் என்பது நேரே பார்த்தறியாத கணிதத்தின் மூலம் நிறுவப்பட்ட அறிவியல் நிறுவல்கள். இவற்றை சாதாரண ஒருவன் பிரயோகித்து எந்த பயனும் பெற முடியாது. ஆனால் பஞ்ச பூத கோட்பாட்டினை விளங்கி கொண்ட எவரும் இதனை தமது வாழ்க்கைக்கு பிரயோகித்து பயன் பெறமுடியும்.
எதிர்வரும் காலத்தில் இது பற்றி மேலும் பதிவிடுவோம்!
பஞ்சபூதக் கோட்பாட்டினை வாழ்க்கைக்குப் பிரயோகித்து, எப்படி பயன் பெறலாம்?
ReplyDeleteஅற்புத விளக்கம் ஐயா,
ReplyDeleteமிக்க நன்றி
அய்யா யஞ்ச யூதவிளக்கம் அருமை முழுவதும் என்னால் உள்வாங்க இயலவில்லை
ReplyDelete