(chaos – பெருங்குழப்பம், nonlinear – அநேர்கோடு)
குழப்பம் என்பது பலருக்கும் பிரச்சனையான ஒன்று. இதைப்பற்றிய விஞ்ஞான புரிதல் chaos theory என்று அழைக்கப்படுகிறது. எனது சூழலியல் ஆய்வில் இந்த விதியை பயன்படுத்தி இருந்தேன் என்று கூறியிருந்தேன், இதன் அடிப்படையினை தமிழ் வாசகர்களுக்காக தமிழில் தர முயற்சிக்கிறேன். இது குழப்பத்தினை புரிந்து கொள்ள உதவும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.
chaos என்பதனை குழப்ப நிலை என்று வரையறை செய்யலாம். இந்த குழப்ப நிலை இரண்டு தளங்களில் நடைபெறமுடியும் ஒன்று காலம் மற்றது இடம். இதனை கொண்டு குழப்ப நிலையில் காலம் சார்ந்த குழப்பம் (''temporal chaos"), இடம் சார்ந்த குழப்பம் ("spatial chaos.")என்று வரையறை செய்யலாம். எப்போதும் ஒரு குழப்பம் நடைபெறுவதற்கு ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் அல்லவா? ஆகவே குழப்பம் நிகழ்வதற்கான நிபந்தனைகள் மூன்றினை குறித்த தொகுதி கொண்டிருக்க வேண்டும்.
அந்த தொகுதி
- Dynamical system: தொகுதி இயங்கும் தன்மை உடையதாய் இருத்தல் வேண்டும்
- Deterministic: குறித்த தொகுதியின் எல்லைகள் வரையறுக்க கூடியதாக இருக்க வேண்டும், அதாவது இந்த தொகுதிக்குள் செலுத்தப்படும் எந்த காரணியும் எந்த எல்லை வரை இயங்கும் என்பதனை தெளிவாக காணக்கூடிய வகையில் தொகுதியின் எல்லைகள் காணப்படவேண்டும்.
- Nonlinear: தொகுதி அநேர்கோட்டு தன்மை உடையதாக இருக்க வேண்டும். அநேர்கோட்டு தன்மை என்பது குறித்த உள்ளீட்டை செலுத்தினால் வெளியீடு நேர் விகித சமனாக வரக்கூடாத தொகுதி.
இங்கு Nonlinear எனப்படும் அநேர்கோட்டு தன்மையினை விளங்கி கொள்வது மிக முக்கியமான ஒருபாகமாகும். நேர்கோட்டு தன்மை என்பது நாம் இலகுவாக விளங்கி கொள்ளகூடிய ஒன்றாகும். இந்த வார்த்தைகள் இரண்டு காரணிகளை எடுத்துகொண்டால் அவை இயங்கும் இயங்கியலின் ஒழுங்கை குறிக்கும். இதை உதாரணம் மூலம் பார்ப்போம்.
கணவனையும் மனைவியையும் இரண்டு காரணிகளாக எடுத்துக்கொண்டு, அவர்களுக்கிடையே காணப்படும் அன்னியோன்யத்தை இயங்கியலாக எடுத்துக்கொண்டால் கணவன் சேலை வாங்கி கொடுக்கும்போதெல்லாம் மனைவி சந்தோஷப்படுகிறாள், இது எப்போதும் நடக்கும் சந்தர்ப்பத்தில் தொகுதி நேர்கோட்டு இயக்கத்தில் இருக்கிறது. அதே போல் குடித்து விட்டு வந்தால் எப்போதும் அடி கொடுப்பாள் என்ற நிலையிலும் தொகுதி நேர்கோட்டில் இயங்குகிறது. இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ந்தால் அவர்களுடைய அன்னியோன்யம் எனும் தொகுதி நேர்கோட்டில் இயங்குகிறது என்று பொருள். இப்படி இருக்கும்போது இருவரும் ஒருவித தெளிவில் இருப்பார்கள். குடித்து விட்டு போனாலும் சேலை வாங்கி கொடுத்தால் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை கணவனுக்கு இருக்கும். இது நேர்கோட்டு இயக்கம்.
ஆனால் அநேர்கோட்டு இயக்கத்ததில் ஒரு நாள் சேலை வாங்கி கொடுத்தால் மகிழ்வாகவும், அடுத்த நாள் வாங்கி கொடுத்தால் ஏன் வாங்கினாய் வீணாக செலவு செய்கிறாய் என்றும், அடுத்த நாள் நீ சேலை எனக்கு வாங்கி தருவதே இல்லை என்றும் நிலை இருக்குமானால் அந்த நிலை அநேர்கோட்டு இயக்கமாகும்.
பொதுவாக சமூகம், மனித வாழ்க்கை எல்லாம் நேர்கோட்டு இயக்கத்தில் ஒத்திசைவாக இருக்கத்தான் விரும்புகின்றன. அநேர்கோட்டு நிலையினை குழப்பம், பைத்தியம், குழப்பகாரன் என்று கூறுகின்றன.
இந்த நேர்கோட்டு நிலைக்கும் அநேர்கோட்டு நிலைக்கும் உள்ள வேறுபாட்டை பிரதானமாக மூன்றாக வகைப்படுத்தலாம்.
- நேர்கோட்டு இயக்கியலில் குறித்த கால ஓட்டத்தில் அதன் இயங்கியல் எப்போதும் அமைதியுடனும் ஒருவித ஒழுங்கில் காணப்படும். அநேர்கொட்டு இயக்கத்தில் ஆரம்பத்தில் ஒரு ஒழுங்குடன் காணப்பட்டு பின்னர் நேரத்துடனும் காலத்துடனும் எப்படி இயங்கும் என்று விளங்க முடியாதபடி தொகுதி இருக்கும். நாம் முன்னர் கூறிய உதாரணத்தில் நேர்கோடு காதலிக்கும் போது (சிலருக்கு காதலிக்கும் போதும் அநேர்கொடுதான்!) அநேர்கொட்டு இயங்கியல் கலியாணத்தின் பின்னர்!
- சிறு தூண்டலுக்கான விளைவு: நேர்கோட்டு தொகுதியில் சிறு தூண்டலுக்கு சிறு விளைவு மட்டுமே காணப்படும். அநேர்கொட்டு தொகுதியில் சிறு தூண்டலுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பாரிய விளைவு ஏற்படும். உதாரணம்: சாராயம் குடிக்காமல் சோடா குடித்தேன் என்று கூறியதற்காக விவாகரத்து! – இதில் எந்த நியாயமும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா! அதுதான் அநேர்கொட்டு இயக்கம்! J
- சிறு தூண்டலின் இயக்க காலம். நேர்கோட்டு தொகுதியில் சிறு தூண்டலை கொடுத்தால் நேரத்துடன் அதற்கான விளைவு படிப்படியாக குறைந்து சற்று காலத்தின் பின்னர் ஒழுங்கிற்கு வரும். அநேர்கொட்டு தொகுதியில் சிறு துலங்கலை கொடுத்தால் பெரிதாகி காலத்துடன் இன்னும் பெரிதாகி கொண்டு போகும். இதற்கு உதாரணம் சொல்லவே வேண்டாம், உங்கள் அனுமானத்திற்கு விட்டுவிடுகிறேன்!
பெருங்குழப்பம் உருவாக்குவதற்குரிய அடுத்த நிபந்தனை தொகுதி இயங்கும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். இயங்காத தொகுதியில் குழப்பம் உருவாக வாய்ப்பில்லை. தொகுதியின் இயக்கவியலை அதன் சக்தி இழப்பினை கொண்டு இரண்டு வகையாக பிரிக்கலாம். சக்தி இழப்பற்ற இயக்க தொகுதி, இந்த தொகுதியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு, அப்படி குழப்பம் ஏற்படுத்தினால் அந்த குழப்பத்தை வலுவாக எதிர்த்து மீண்டும் சமநிலையிற்கு வந்துவிடும்.
அடுத்தது சக்தி விரைய தொகுதி, இந்த தொகுதியில் குழப்பம் எப்போதும் இருக்கும் ஒன்றாகும். ஆக குழப்பம் ஏற்படுவதற்கான காரணிகளில் தொகுதியின் சக்தி சமநிலை முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
Chaos theory சித்தர்இலக்கியங்களை புரிந்து கொள்வதில் பயன்படக்கூடியது, மேலே கூறியபடி மதங்கள் எல்லாம் அநேர்கோட்டு நிலையினை தொகுதியை அமைத்து கட்டுப்படுத்தமுனைகின்றன. இதனால் மீண்டும் பெருங்குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. அநேர்கொட்டு இயக்கத்தினை கட்டுப்படுத்தினால் காலமும் இடமும் இல்லாமல் போய்விடும். பெருங்குழப்பமும் இல்லாமல் போய்விடும். அநேர்கொட்டு இயக்கத்தை சலனம் என்கிறோம். மனிதனில் பிராணனும் மனமும் சலனிப்பதால் chaos உண்டாகிறது. இந்த சலனத்தை இல்லாதாக்குவதே வாசி, சலனம் அற்றால் சிவா, சைவசித்தாந்தத்தின், சித்தர் தத்துவம் எல்லாம் சிவம்சலனமற்ற நிலை, சக்தி சலனத்தை உண்டு பண்ணுகிறது, என்பதெல்லாம் இந்த chaos theoryஇன் மிகவிரிவான வடிவங்கள்!
இன்று இந்த அளவு போதும்.... வேறொரு சந்தர்ப்பத்தில் மேலதிக தகவல்களை பகிர்கிறேன்!
அருமை நண்பரே.
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteஐயா,
ReplyDeleteநன்றி
வி.ரவீந்திரன்.