எமது சமூகத்தில்
காணப்படும் பல நம்பிக்கையில் ஜோதிடமும் ஒன்றாகும். குறிப்பாக வாழ்க்கையில்
துன்பம் வரும்போதும், ஆபத்துக்கள்
வரும்போதும், திருமணம் போன்றவற்றில் ஜோதிடத்தின் பாதிப்பு இல்லாமல்
முடிவேடுக்கப்படுவதில்லை.
இது இப்படி இருக்க
ஜோதிடம் என்பதும் பலரை கோழைகளாகவும், வாழ்க்கையில் நம்பிக்கை அற்றவர்களாகவும்,
சோம்பேறிகளாகவும் மாற்றிக்கொண்டு இருக்கிறது என்பது அனுபவப்பூர்வமாக காணப்படும்
ஒன்று.
செவ்வாய் தோஷம் என்று
முப்பது வயது வரை திருமணம் முடிக்காத முதிர் கன்னிகள், ஏழரை சனி அதனால் படிப்பு
வராது என்று ஒவ்வொரு முறையும் பரிட்சையில் பெயிலாகும் மாணவர்கள், அஷ்டமத்து சனி
என்று வாகனத்தில் மோதிக்கொண்டவர்கள் என பலரையும் பட்டியலிடலாம். இத்தகைய
பட்டியலில் உள்ளவர்களை பார்த்தால் தமது புத்தியினையும், மனதினையும் சரியான வழியில்
பயன்படுத்த தெரியாமல், பேராசையால் அகலக்கால் வைத்து வியாபாரத்தில் விழுந்தவர்கள்,
வாழ்கையின் அடிப்படை தர்மம் தெரியாதவர்கள், வாழ்க்கையில் துன்பம் என்பதும் இன்பம்
என்பது பொதுவானது, சவால்களை சமாளித்து வெல்வோம் என்ற மனவுறுதி இல்லாதவர்கள்,
படித்தால் மட்டும்தான் பரிட்சையில் சித்தியடைவோம் என்ற அடிப்படை விதியை
விட்டுவிட்டு கடவுளுக்கும், நவக்கிரகங்களுக்கும் லஞ்சம் கொடுத்தவர்கள் என
அடங்குவர்.
அதிகாலையில் வானொலியினை
போட்டால் அதில் ராசி பலன் சொல்கிறோம் என்று குறித்த ராசி உள்ளவர்களுக்கு இன்று
தோல்வி, அவமானம், என்று கூறுகிறார்கள். இது எப்படி உண்மையாக முடியும்? அடிப்படையில்
இராசியை வைத்துக்கொண்டு பலன் கூறுவது ஒரு ஏமாற்று வேலை.
அறிவு கொண்டு
சிந்திக்கும் அனைவரும் இவை உண்மையா இல்லையா என்று சிந்திக்காமல் இருக்க
மாட்டார்கள். இப்படி சிந்திப்பவர்களுக்கு சரியான விடையினை ஜோதிடம் பார்க்கிறோம்
என்று கூறும் அரை குறை ஜோதிடர்கள் கூறுவதில்லை. இதனால் அந்த ஜோதிடம் தவறானது என்று
கூறப்படுகிறது.
ஜோதிஷம் என்றால் ஒளியினை
காட்டுவது என்று பொருள். ஒளி எதற்கு தேவை, இருளில்
இருப்பவற்றை பார்ப்பதற்கு. மனிதன் இருக்கும் இருள் ஒன்று புற இருள், மற்றையது அக இருள், புற இருளிற்கும்
சூரியனும் விளக்குகளும் உள்ளன, அக இருளிற்கு
தேவையானது ஞானம், ஞானத்தினை
பெறுவதற்கு தெளிவு அவசியம், தெளிவிற்கு நாம்
வாழும் இயற்கையும், சூழலும் அது
எப்படி எம்மில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதனையும் தெரிந்து, அந்த செல்வாக்கிற்கு ஏற்றவாறு எமது வாழ்க்கையினை எப்படி அமைத்துக்கொள்வது
என்பதனையும் தெரிந்து கொள்வதன் மூலம் எமது வாழ்க்கையினை சிறப்பாக
அமைத்துக்கொள்ளலாம். பிரபஞ்சத்திற்கும் மனிதனிற்கும் இருக்கும் தொடர்பினையும்
செல்வாக்கினையும் காட்டுவதே ஜோதிடம்.
இது பண்டைய சமுதாயம்
வானில் உள்ள நட்சத்திரங்களும், பூமியை சூழ உள்ள கிரகங்களும் மனிதனதும்,
புவியினதும் வாழ்வில் எப்படியான தாக்கத்தினை செலுத்துகிறது என்று தமது அனுபவத்தின்
மூலமும், ஆய்வின் மூலமும் தொகுத்த அறிவு ஆகும்.
ஜோதிடத்தில் மூன்று
பகுதிகள் உள்ளன, 1) வானியல் 2) கணிதம் 3) எதிர்வு கூறல், இவற்றில் வானியலும்,
கணிதமும் விஞ்ஞானமாகும். எதிர்வு கூறல் என்பது கணிதத்தினையும், வானியலையும்
வைத்துக்கொண்டு அது சார்பாக கணிக்கப்படும் ஒரு கலையாகும் (this is art not a science!). இது விஞ்ஞான அடிப்படையாக இருப்பதும்,
இல்லாமல் இருப்பதும் கணிப்பவரது. திறமை சார்ந்தது.
ஒருவரின் ஜாதகம் சரியாக
இருப்பதற்கு பிறந்த நேரம் சரியாக இருக்க வேண்டும் என்பது முதலாவது விதி. எது பிறந்த
நேரம் என்பது பற்றி பண்டைய நூலாசிரியர்களிடம் பலவித கருத்துகள் உள்ளன, ஒன்று
வயிற்றில் இருந்து தலை வெளியே வரும் நேரம், உடல் பூமியில் படும் நேரம், தொப்புள்
கொடி வெட்டப்படும் நேரம், விந்தும் முட்டையும் இணைந்து கரு உருவான நேரம் என்பன
அவையாகும்.
ஆகவே ஒருவரது பிறந்த
நேரம் இதுதான் என்று கூறுவதிலேயே மிகுந்த கடினம் உள்ளது. ஆக முதலாவது எல்லோருடைய
பிறந்த நேரம் சரியானது என்பதில் எந்தவித உறுதியும் இல்லை. ஆகவே கணிதம் பிழைக்கும்
என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மேலும் கணிதம் என்பது
இன்றைய ஜோதிடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பார்க்கும் ராசி, நவாம்சம் மட்டும் அல்ல.
இன்று அனைவரிடமும் இருக்கும் சாதகம் எனும் குறிப்பில் இரண்டு பன்னிரண்டு கட்ட
சதுரங்கள் இருக்கும், இவை இரண்டையும் வைத்துக்கொண்டு பராசரர் போன்ற ஜோதிடத்தின்
மூல நூற்களை இயற்றிய மகரிஷிகள் ராசி என்பது ஒருவனது பௌதீக நிலையினை பற்றியும்,
நவாம்சம் என்பது ஒருவனது துணை, துணை
பற்றிய விபரம், தர்மம், மற்றவர்களுடனான உறவு, ஒருவனுடைய அகத்தன்மை ஆகியன பற்றி
மட்டுமே கூறும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஒருவனுடைய வாழ்க்கையின் தன்மை பற்றி
அறியவேண்டுமானால் குறைந்தது இருபது வகையான வர்க்க சக்கரங்களை கணித்து
இருக்கவேண்டும். செல்வ நிலை பற்றி அறிய ஹோரா சக்கரம், வீடு, நிலபுலம் பற்றி அறிய
சதுராம்சம், புகழ், அதிகாரம் பற்றி அறிய பஞ்சாம்சம், நோய் நிலைகள் பற்றி அறிய
சஷ்டாம்சம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பற்றி அறிய சப்தாம்சம், தொழில், சமூக செல்வாக்கு
பற்றி அறிய தசாம்சம், வாகனம், சுகபோகங்கள் பற்றிய அறிய சொடசாம்சம், ஆன்மிகம் பற்றி
அறிய விம்சாம்சம்,வாழ்வின் மொத்த நிலை பற்றி அறிய அக்ஷாவேதாம்சம் என பல கணிப்புகள்
உள்ளன.
இப்படி கணித்தாலும் இவை
அந்த விடயம் சார்ந்ததன் நிலையினை குறிக்குமே அன்றி அப்படி நடக்கும் என்பது இல்லை.
ஆக இன்று ஜாதகம் பார்க்கும் ஜோதிடர்கள் ராசி நவாம்சம் ஆகிய இரண்டு சக்கரங்களையும்
வைத்துக்கொண்டு நோய், கல்வி, தொழில் பற்றியெல்லாம் கணிப்பு விடுவது வேடிக்கைக்குரியது.
மக்களின் அறியாமை ஜோதிடர்களுக்கு வருமானமாகி விட்டது.
அடிப்படையில் இன்று ஜோதிட
வியாபாரம் ஒரு பய உளவியலில் கொடி கட்டி பறக்கிறது. மனிதன் அடிப்படையில் ஏதாவது ஒரு
பிரச்சனை வந்தவுடன் அதற்கு காரணம் என்னவென்று அறிய விரும்புகிறான், அதற்கு ஒரு
பாதையாக இருப்பது ஜோதிடம், ஆனால் சிக்கல் என்னவென்றால் குறித்த சாதாரண நபரால்
ஜோதிடத்தின் அடிப்படை என்னவென்று தெரியாமல் இருப்பது ஜோதிட வியாபாரிக்கு சாதகமாக
போய்விடுகிறது.
அடிப்படையில் எமது மனம்
எப்படி செயல்படுகிறதோ அதன்படியே பலனும் கிடைக்கும். நாம் செய்யும் செயலுக்கான விளைவுகளே
எமது வாழ்க்கை அன்றி எங்கோ வானத்தில் இருக்கும் கிரகங்கள் எமக்கு பலனை தருவதில்லை.
அவை ஒரு ஒழுங்காக்கிகள் போல் செயற்படுகின்றன என்பதுதான் எமது முன்னோர்கள் ஜோதிடம்
என்று கண்ட வழி!
இதன் படி இதனை துறையற
கற்றால் இருளின் நடக்கும் ஒருவனிற்கு கையில் விளக்கு கிடைத்தால் எப்படி இருக்கோமோ
அதுபோல் எமது வாழ்வு பற்றிய விடயங்களை தெளிவாக காட்டும் ஒரு கலையே ஜோதிடம் அன்றி
எமக்கு நடக்கபோகும் அனைத்தையும் நூறுசதவீதம் காட்டும் மாயக்கண்ணாடி அல்ல! அத்தகைய
திறமையாக ஜோதிடத்தை மகரிஷிகள் கூறியபடி தெளிவாக ஆழமாக கற்றவர்கள் தற்காலத்தில்
யாருமில்லை என்பதும், ஜோதிடம் பார்க்கும் பலரும் அரைகுறை அறிவுடனும், ஒரு நல்ல
மென்பொருள் கிடைத்தால் இன்று யாரும் ஜோதிடராகிவிடும் நிலையும்தான் காணப்படுகிறது.
ஆகவே இத்தகைய நிலையில்
எமது அறிவினையும், ஆத்ம சக்தியினையும் அடகு வைக்காமல் நாம் செய்யும் செயல்களை
அறிவுடன் ஆராய்ந்து செய்து வரும் விளைவுகளையும், சம்பவங்களையும் சலிக்காமல்
எதிர்கொண்டு நமக்கு மேல் ஒரு சக்தி உண்டென்பதனை மனதில் கொண்டு வாழ்வோமானால்
வாழ்வில் வீணான குழப்பங்களை தவிர்த்து கொள்ளலாம்.
மேலும் இந்த கட்டுரை
மூலம் கூறவருவது என்னவென்றால் ஜோதிடம் பொய் என்றோ, போலி என்றோ அல்ல, எந்த ஒரு
கலையும், அறிவும் சமூகத்தினதும், தனிமனிதனதும் ஆக்கத்திற்கு பயன்படுமாயின் அது
நல்லது. ஆக்கத்திற்கா அழிவிற்கா என்பது அதனை பயன்படுத்தும் நபரின் நோக்கத்தில்
தங்கியுள்ளது. இந்த வகையில் ஜோதிடம் ஒரு தொழில் ஆகிவிட்டதால் அதன் உண்மை தன்மை
மாறிவிட்டது என்பது இன்று கண்கூடு. மூல நூற்களின் படி ஒரு விடயத்தை கணிக்க
கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்பட்ட வர்க்க சக்கரங்களை ஆராய்ந்து கணிக்க வேண்டி இருக்கையில் இரண்டு சக்கரங்களை
வைத்துக்கொண்டு ஒருவனை பயமுறுத்துவது பிழையானது. இப்படி தெளிவாக கற்றவர்கள் இன்று
பலர் இல்லை என்பதுதான் உண்மை.
அதேவேளை தினசரி இராசி
பலன், குறித்த இராசிக்கு அட்டமத்து சனி, ஏழரை சனி என்று கூறப்படும் கணிப்புகள்
முற்றிலும் ஒருவனை உளவியல் ரீதியாக பாதிக்க செய்யும். இந்த கருத்து ஆழ்மனத்தில்
பதியும் போது அதுவே நடைபெற்று விடுகிறது. உதாரணமாக அட்டமத்து சனி விபத்து நிகழும்
என்று ஜோசியர் கூறிவிடும் போது அதையே எண்ணி எண்ணி ஆழ்மனதினூடாக நடைபெறும்
சாத்தியத்தினை உருவாக்கி விடும். இப்படி நடந்தவுடன் அந்த ஜோசியரும் தான் சரியாக
கணித்துவிட்டதாக நம்பிக்கொண்டு மீண்டும் மீண்டும் அவர் சொல்லுவதே வேத வாக்காகி
விடுகிறது, இப்படி சொந்த புத்தியையும் ஆத்ம சக்தியினையும் அடகு வைத்து விடுகிறோம்.
உண்மையான ஜோதிட தத்துவத்தின் படி இவற்றை சரியாக கணிப்பதற்கு பலநூறு கணிப்புகள்
தேவை.
ஜோதிடத்தில் எதிர்வு கூறல் என்பது அதனை
கூறுபவரது ஞானத்தினை பொறுத்தே சரியாக இருக்கும் என்பதும், கூறுபவர் சரியாக கூறினால்
ஒருவன் தனது ஆத்ம, மனோ பலத்தாலும், இறைவனின் கருணையினாலும் அந்த நிகழ்வினை மாற்றலாம் என்பதனை ஜோதிடத்தில்
நம்பிக்கையுள்ளவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
உங்கள் வாழ்க்கையினை பற்றி எந்த சோதிடராவது
அவநம்பிக்கையாக கூறினால் ஜோதிடத்தினை மனிதகுலத்திற்கு தந்த மகரிஷிகள் கூறிய
வழிப்படி நடக்காதவர்கள், ஞானமற்றவர்கள் என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தை நம்புகிறோம் என்று எமது ஆத்ம
சக்தியினையும், மனோ சக்தியினையும் அடகு வைக்க கூடாது.
இலங்கை தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ஞாயிறு தினக்குரலில்மேற்குறித்த கட்டுரை 02/02/2015 அன்று வெளியானது, அதன் பதிப்பு படம் கீழே தரப்பட்டுள்ளது .
இக்காலகட்டத்திற்கு அவசியமான ஆழமான ஒரு பதிவு. மேலும் நம்மைச் சூழவுள்ள கிரகங்களிலும் நட்சத்திரங்களிலும் ஏற்பட்ட சில அண்மைக்கால மாற்றங்களை இச்சோதிட சிகாமணிகள் அறிந்துகொண்டு அவற்றுக்கேற்றால்ப்போல் தமது கணிப்புகளை மேற்கொள்வதும் கிடையாது. உதாரணத்திற்கு 1994 ஆம் ஆண்டு வியாழக்கிரகத்தில் 21 துண்டுகளாக பிரிந்து மோதி அதனது அச்சில் சிறு மாற்றத்தை ஏற்படுத்திய Shoemaker Levy என்ற வால்வெள்ளி பற்றியும் அதனால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகள் தொடர்பாகவும் இர்கள் அறிந்திருப்பார்ளோ தெரியவில்லை.
ReplyDeleteசிறந்த பதிவு சகோதரர்...
ReplyDeleteஎதிர்காலத்தை கட்டமைப்பதில் நமது சொந்த புத்திக்கு பங்கு இருக்கிறது என்பதனை அறியாத / அறிந்தால் நம்ப மறுக்கின்ற / நம்பினால் முழுதாக நம்பாத நிலையில் உள்ள சமூகம், தமது கர்மாக்களால் வடிவமைக்கப்பட்ட விதியே சர்வ நிச்சயமாக தமது வாழ்க்கையை நடத்திச் செல்கின்றது என்பதை நம்புகின்றது. இறையருள் மூலமாக அது பாதகமாக இருந்தால் முடிந்த அளவு கட்டுப்படுத்துவதற்கும் சாதகமாக இருந்தால் இன்னும் இன்னும் மேம்படுத்துவதற்கும் முயல்கிறது. கூரிய புத்தியால் எவ்வாறு விதியை கட்டுக்குள் கொண்டு வந்து, அதன் மூலம் நமது சூழ்நிலைகளை கட்டுக்குள் கொண்டு வந்து, பிரச்சனைகளின் மூலத்தைக் கண்டறிந்து அவற்றை அகற்றிவாழ்க்கையை அமைதியான நீரோட்டமாக்கலாம் என்பதை பலர் அறிவதில்லை. சிலர் அறிந்தாலும் பலகாலமாக இருந்து வருகின்ற மேற்சொன்ன நம்பிக்கை திடீரென்று ஒரு கணத்தில் புத்தியின் சக்தியை உணர வைக்கை விடுவதில்லை. இதனாலேயே இன்றும் மூட ஜோதிடப் பற்று நமது சமூகத்தில் உலவுகிறது என்பது எனது கருத்து.
ReplyDeleteஎதிர்காலம் என்பது அனுமானிக்கப்படக் கூடியதேயொழிய எதிர்வு கூறப்படக் கூடியதேயொழிய யாராலும் இவ்வாறுதான் இருக்கும் என்று உறுதிபடச் சொல்ல முடியாத ஒன்று. ஏனென்றால் அது எவராலும் எதனாலும் ஏற்கனவே முற்றாகத் திட்டமிடப்பட்டு முடிக்கப்பட்ட ஒன்று அல்ல.
ReplyDeleteஐயா,
ReplyDeleteஈடு இனையற்றது தங்களின் சேவை நன்றி அய்யா
நன்றி
வி.ரவீந்திரன்.